செய்திகள்
அமைச்சர் நமச்சிவாயம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக அமைச்சர் நமச்சிவாயம் முடிவு

Published On 2021-01-24 08:59 GMT   |   Update On 2021-01-24 08:59 GMT
புதுவையில் அமைச்சர் நமச்சிவாயம் முக்கிய பிரமுகர்களுடன் 2 இடங்களில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் கூறிய அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரி:

புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது தொகுதியில் முக்கிய பிரமுகர்களுடன் 2 இடங்களில் ஆலோசனை நடத்தினார்.

வில்லியனூரில் உள்ள அவரது அலுவலகத்தில் இரவு 8 மணியளவில் சுல்தான்பேட்டையை சேர்ந்த முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து வாணியர் திருமணமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு வில்லியனூர் தொகுதி ஆதரவாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவி ஏற்றது முதல் கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். சட்டமன்ற பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் உள்ளிட்ட பல தேர்தலை சந்தித்து அதில் அனைத்திலும் கட்சி வெற்றி பெற கடுமையாக உழைத்தோம்.

அப்படிப்பட்ட என்னை கட்சித்தலைவர் பதவியில் இருந்து தூக்கினர். கட்சியில்தான் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றால் எனது துறை மீதான பணிகளிலும் முதல்- அமைச்சர் தலையிட்டு பல தடைகளை ஏற்படுத்தி வருகிறார்.

என்னை நம்பி வந்தவர்களுக்கு துறையில் பதவி உயர்வு, பணியிட மாற்றம் கூட என்னால் செய்து கொடுக்க முடியவில்லை. கட்சிக்காரர்களுக்கும், தொகுதி இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியவில்லை.

அதனால் கட்சியில் இருந்து வெளியேறி விடலாம் என முடிவு செய்துள்ளேன். அரசியலில் இருந்தும் விலகலாம் என நினைக்கிறேன்.

இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

அப்போது அவரது ஆதரவாளர்கள் அரசியலில் இருந்து வெளியேற வேண்டாம் என கோ‌ஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், விரைவில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மாற்று அரசியல் நிலைப்பாட்டை எடுக்கலாமா? என ஆதரவாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவரது ஆதரவாளர்கள் நீங்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கோ‌ஷமிட்டனர். இதையடுத்து ஆதரவாளர்கள் கூட்டம் அரை மணி நேரத்தில் முடிந்தது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயத்திடம், ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை கூட்டம் ஏன்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நான் தொடர்ந்து தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றார்.

பா.ஜனதாவுக்கு நீங்கள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு இதுவரை அதுபோன்ற நிலைப்பாடு இல்லை என்று பதில் அளித்தார்.

Tags:    

Similar News