செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி

சீரம் நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

Published On 2021-01-21 17:53 GMT   |   Update On 2021-01-21 17:53 GMT
புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 5 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு எனும் கொரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தின் நுழைவு வாயில் பகுதியில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.

இந்நிலையில், சீரம் நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 5 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் துரதிர்ஷ்டவசமான தீ விபத்தால் ஏற்பட்ட உயிர் இழப்பு வருத்தமளிக்கிறது. உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தால் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த சோகமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News