செய்திகள்
வாகன சோதனையில் சிக்கிய பணம்

ஆந்திராவில் வாகன சோதனை- சொகுசு பேருந்தில் சிக்கிய ரூ.3 கோடி

Published On 2021-04-10 14:33 GMT   |   Update On 2021-04-10 14:33 GMT
பேருந்தில் கொண்டு வரப்பட்ட 3 கோடி ரூபாய் பணம், சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்னூல்:

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள, ஆந்திரா - தெலுங்கானா எல்லையான பஞ்சலிங்கா சோதனைச் சாவடியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற  தனியார் சொகுசு பேருந்தை மறித்து, அதில் பயணித்த பயணிகளை கீழே இறக்கி தனித்தனியாக சோதனையிட்டனர்.

அப்போது, பெங்களுருவைச் சேர்ந்த சேத்தன் குமார் என்பவர் 2 டிராலி பேக்குகளை கொண்டு வந்தார். அதை சோதனை செய்தபோது, அதில், கட்டுக்கட்டாக ரூ.3 கோடி அளவிற்கு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மற்றொருவரிடம் ஒரு கிலோ தங்க நகைகள் இருந்தன. 

இந்த பணம் மற்றம் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், பேருந்தில் கொண்டு வரப்பட்ட 3 கோடி ரூபாய் பணம், சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.



இதேபோல் தெலுங்கானா முன்னாள் மந்திரி நைனி என் ரெட்டியின் மருமகன் ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் ரூ.3 கோடி ரொக்கப்பணம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், வெற்று காசோலைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தம் 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 
Tags:    

Similar News