செய்திகள்

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ ‘பிளேஆப்’ சுற்று: திருவள்ளூர் - கோவை அணிகள் இன்று மோதல்

Published On 2017-08-12 10:43 GMT   |   Update On 2017-08-12 10:43 GMT
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பாபா அபராஜித் தலைமையிலான திருவள்ளூர் வீரன்ஸ் - சையத் முகமது தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை:

2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடை பெற்று வருகிறது.

இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காரைக்குடி காளை ஆகிய 3 அணிகள் இதுவரை ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்னும் ஒரே ஒரு அணி தகுதி பெற வேண்டும்.

மதுரை சூப்பர் ஜெயன்ட், ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன. திருவள்ளூர் வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 3 அணிகள் போட்டியில் உள்ளன.

25-வது ‘லீக்’ ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் பாபா அபராஜித் தலைமையிலான திருவள்ளூர் வீரன்ஸ் - சையத் முகமது தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் வெற்றி பெற்றால் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். தோல்வி அடைந்தால் எஞ்சிய ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். திருவள்ளூர் வீரன்ஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

கோவை கிங்ஸ் 4 புள்ளியுடன் இருக்கிறது. அந்த அணியும் ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க திருவள்ளூர் வீரன்சை கண்டிப்பாக வீழ்த்தியாக வேண்டும். இரு அணி வீரர்களும் வெற்றிக்காக மிகவும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News