செய்திகள்
நாமக்கல்லில் பள்ளி வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

நாமக்கல்லில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு

Published On 2021-08-25 12:54 GMT   |   Update On 2021-08-25 12:54 GMT
நாமக்கல்லில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று ஆய்வு செய்தார்.
நாமக்கல்:

தமிழக அரசு உத்தரவின் படி வருகிற செப்டம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து, நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை நாமக்கல் செல்வம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று ஆய்வு செய்தார்.

123 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 24 வாகனங்களில் அவசரகால வழி, நடைப்பாதை பலகை, படிக்கட்டு, முதலுதவி பெட்டி மருந்துகள், தீயணைக்கும் கருவிகள் மற்றும் ஓட்டுனர் தடுப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதை சரிசெய்து மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 99 வாகனங்களுக்கு பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் இந்த ஆய்வில் கலந்து கொண்ட பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர்களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், கிருமிநாசினி வழங்கி கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி வாகன டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு தான் வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி வளாகத்தில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 60 வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் குறைபாடுடைய 4 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அதனை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? குழந்தைகளின் இருக்கைகள் சரியாக உள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்தனர். உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலர் ரவி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபாகரன், பாமப்பிரியா, சத்யா மற்றும் போக்குவரத்து, கல்வி, காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News