செய்திகள்
அண்ணாமலை

பாஜக வேட்பாளர் அண்ணாமலை கொரோனா தொற்றால் பாதிப்பு

Published On 2021-04-11 09:58 GMT   |   Update On 2021-04-11 09:58 GMT
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரவக்குறிச்சி:

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கிடையே களத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர்.

குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சந்தோஷ் பாபு, திருச்சி மாவட்டம் துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகினர். இதனால் அவர்கள் பிரசாரத்திற்கு செல்ல முடியாமல் முடங்கினர்.

இந்த நிலையில் அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையும் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு முன்பாக தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, நடிகை நமீதா உள்ளிட்டோரும் பிரசாரம் செய்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. மிகவும் சோர்வுடன் காய்ச்சலும் இருந்தததால் அவர் தாமாக சென்று பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவும், தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Tags:    

Similar News