செய்திகள்
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்ததை படத்தில் காணலாம்.

ராசிபுரம் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு

Published On 2021-06-11 02:24 GMT   |   Update On 2021-06-11 02:24 GMT
ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதல் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், கூடுதல் பணிகளுக்காக தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா நோய் தொற்று உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விரைவாக குணம் அடையலாம் என்பதற்காக சுகாதாரத் துறையின் மூலம் காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளாநல்லூர் பேரூராட்சி, ராமலிங்க நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு பகுதியை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து முனியப்பன் கோவில் பகுதியில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கணக்கெடுக்கும் பணியையும், கூனவேலம்பட்டி ஊராட்சியிலும் கலெக்டர் ஆய்வு செய்தார். உள்ளாட்சி நிர்வாக பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பல்ஸ்ஆக்சி மீட்டரை பயன்படுத்தி ஆக்சிஜன் அளவு கணக்கீடு செய்யப்படுவதையும், இன்ப்ராரெட் தெர்மாமீட்டர் மூலம் வெப்பநிலை கணக்கீடு செய்யப்படுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அவர் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிப்பட்டி, காக்காவேரி, வேலம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜேடர்பாளையம், தொப்பப்பட்டி, பச்சுடையாம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளிலும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது வீடுகளில் உள்ள நபர்களுக்கு ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்பட்ட விவரங்களை பதிவேடுகளில் பார்வையிட்டு ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ள நபர்களை உடனடியாக அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், குருக்கபுரம் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தூவாரகநாத் சிங், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜவகர், பிள்ளாநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவராஜ், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார தலைமை டாக்டர் தயா சங்கர், சீராப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நாகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உஷா, சுந்தரம் மற்றும் அருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News