ஆன்மிகம்
அண்ணன்மார்

மணப்பாறை அருகே அண்ணன்மார் கோவிலில் இன்று படுகளம் நிகழ்ச்சி

Published On 2021-03-18 08:10 GMT   |   Update On 2021-03-18 08:10 GMT
மணப்பாறை அருகே படுகளம் அண்ணன்மார் கோவிலில் இன்று படுகளம் நிகழ்ச்சியும், வீரப்பூரில் நாளை வேடபரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மணப்பாறை ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சி, வீரமலை அடிவாரத்தின் ஒரு பகுதியில் உள்ள அண்ணன்மார் என்றழைக்கப்படும் பொன்னர்-சங்கர் மாண்ட இடத்தில் உள்ள படுகளம் கோவில் திருவிழா கடந்த சிவராத்திரி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(வியாழக்கிழமை) இரவு அண்ணன்மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல், அம்மன் பூ பல்லக்கில் பவனி ஆகியவை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை படுகளம் கோவில் பரம்பரை அறங்காவலர்களும், படுகளம் பூசாரிபட்டி ஊர் பட்டையதார்களுமான வெ.ஆறுமுகம் பூசாரி, பொ.முனியப்பன் பூசாரி, ஆ.கருப்பண்ணன் பூசாரி, மு.வீரசங்கன் பூசாரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் இருந்து பொன்னர் குதிரை வாகனத்தில் அணியாப்பூர் குதிரை கோவில் சென்று அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சி நாளை(வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.

வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களும், வீரப்பூர் ஜமீன்தார்களுமான ஆர்.பொன்னழகேசன்,சவுந்தரபாண்டியன், சுதாகர் என்ற சிவசுப்பிரமணி ரெங்கராஜா தலைமையில் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை பூசாரிகளும், நான்குகரை பட்டையதார்களுமான பெரியபூசாரி மு.செல்வம், குதிரை பூசாரி மாரியப்பன், வேட்டை பூசாரி வீரமலை, சின்ன பூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி மற்றும் பூசாரிகள், சோம்பாசிகள், பரிசாளங்கள், பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திருவிழாவை சிறப்பாக நடத்திவும், பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
Tags:    

Similar News