செய்திகள்
சிங்களாந்தபுரம் ஊராட்சியில் நடந்து வரும் சாலைப்பணியினை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்ட காட்சி

ராசிபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு

Published On 2020-11-19 12:56 GMT   |   Update On 2020-11-19 12:56 GMT
ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.56½ லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராசிபுரம்:

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் குருக்கபுரம் ஊராட்சி கொழிஞ்சிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.8.90 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் மதிப்பில் உறிஞ்சிகுழி அமைக்கப்பட்டது. ரூ.2.97 லட்சம் மதிப்பில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ரூ.4.33 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோல் முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் ரூ.13.85 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணியையும், ரூ.22.65 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிங்களாந்தபுரம் ஊராட்சியில் ரூ.3.69 லட்சம் மதிப்பில் 69 மீட்டர் நீளத்திலும், 4.20 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த பணிகளை விரைந்து முடிக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அருணன், கிருஷ்ணமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அதிகாரி லோகநாதன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ஆனந்தி, சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோவிந்தராஜ் (குருக்கபுரம்), புஷ்பா மகுடீஸ்வரன் (சிங்களாந்தபுரம்) ஆகியோர் உடன் இருந்தனர். நாமக்கல் நகராட்சி தும்மகுறிச்சி ஊராட்சி பெரியூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் நடந்து வரும் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நாமக்கல் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.

இதேபோல் பட்டணம் பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் குடிமை பொருட்கள் விற்பனை செய்வதை பார்வையிட்டார். வடுகம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சாலை வசதி கேட்டு வந்த மனுக்களையடுத்து அடுத்து அப்பகுதிக்கு சென்று தெருக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக சாலை பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ராசிபுரம் தாசில்தார் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, அருணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News