ஆட்டோமொபைல்

இந்திய சந்தையில் களமிறங்கும் ஹஸ்குவார்னா

Published On 2019-06-03 04:01 GMT   |   Update On 2019-06-03 04:01 GMT
சர்வதேச சந்தையில் மிகவும் பிரபலமான ஹஸ்குவார்னா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன.
சுவீடன் தயாரிப்புகளில் ஹஸ்குவார்னா மோட்டார்சைக்கிள் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானவை. இந்நிறுவனத்தை கே.டி.எம். நிறுவனம் வாங்கியது. இதன் மூலம் கே.டி.எம். நிறுவனத்தில் அதிக அளவில் பங்குகளை வைத்துள்ள பஜாஜ் நிறுவனம் சுவீடனின் ஹஸ்குவார்னா மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த கடந்த ஆண்டிலிருந்தே தீவிரம் காட்டி வந்தது.

இந்நிறுவன மோட்டார்சைக்கிள்கள் அனைத்தையும் இந்தியாவில் கே.டி.எம். விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்ய பஜாஜ் முடிவு செய்துள்ளது. சுவீடன் தயாரிப்புகளை தங்கள் விற்பனையகங்களில் வைத்து விற்பதற்கேற்ப கே.டி.எம். விற்பனையகங்களை விரிவுபடுத்தும்படி பஜாஜ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.


முதல் கட்டமாக ஸ்வார்ட்பிலென் 401 என்ற மாடலை இந்திய சாலைகளில் அறிமுகம் செய்ய  பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சாகசப் பிரியர்களுக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும் கே.டி.எம். மோட்டார்சைக்கிளின் விலையைக் காட்டிலும் (ரூ.2.48 லட்சம்) சற்று கூடுதலாக இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. பஜாஜ் நிறுவனம் கவாசகி நிறுவனத்துடனான தொழில்நுட்ப கூட்டு முறிந்த பிறகு பல்சர், பாக்சர் என சொந்த ஆராய்ச்சி மையத்தில் வாகனங்களை உருவாக்கி வெற்றிகரமானதாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

அடுத்தகட்டமாக ஆஸ்திரியாவைச் சேர்ந்த கே.டி.எம். நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் நிறுவனத்தின் லாபம் பல மடங்கு அதிகரித்தது. தற்போது இத்தாலிய நிறுவனத்தையும் கே.டி.எம். மூலம் வாங்கியதால் சாகச மோட்டார்சைக்கிள் பிரிவில் பஜாஜ் நிறுவனம் அசைக்க முடியாத சக்தியாக வலுப்பெற்று வருகிறது.

Tags:    

Similar News