உள்ளூர் செய்திகள்
கைது

அரிவாளால் கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி பினு வழிப்பறி வழக்கில் கைது

Published On 2022-04-16 08:26 GMT   |   Update On 2022-04-16 08:26 GMT
வழிப்பறி வழக்கில் தலைமறைவாக உள்ள பினுவின் கூட்டாளிகளான அரி, காசிம் இருவரையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பினு. கேரளாவை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி இருந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். 1997-ம் ஆண்டு முதல் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் பினு மீது 20 வழக்குகள் உள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் பகுதியில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பினு பிறந்தநாள் கேக் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த பினு பின்னர் போலீசில் சரண் அடைந்தார். இதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்ட பினு ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்த நிலையில் தான் தேனாம்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடி பினு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

தி.நகர் கண்ணம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் தனியார் டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இருந்து செல்போன் ஆர்டர் செய்யப்பட்டதையடுத்து ஜானகி ராமன் செல்போனை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ரவுடி பினு தனது கூட்டாளிகள் இருவருடன் ஜானகிராமனை வழிமறித்து கையால் தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து செல்போன், ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக பினு ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளான அரி, காசிம் ஆகியோர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் முரளி, தப்பி ஓடிய பினுவையும், கூட்டாளிகளையும் தேடி வந்தார்.

இந்த நிலையில் பினு, வக்கீல் ஒருவர் மூலமாக போலீசில் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் பினுவை ஆஜர்படுத்தினர். அப்போது பினு தரப்பில் ஆஜரான வக்கீல், பினுவுக்கு நெஞ்சுவலி, சர்க்கரை நோய் இருப்பதாக தெரிவித்தார்.

அதுதொடர்பான ஆவணங்களையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பித்தார். இதையடுத்து வருகிற 29-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ் திரேட்டு உத்தரவிட்டார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக பினு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்குள்ள டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பினு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் பினுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்த பின்னர் பினு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

வழிப்பறி வழக்கில் தலைமறைவாக உள்ள பினுவின் கூட்டாளிகளான அரி, காசிம் இருவரையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News