உலகம்
ஜோ பைடன்

பத்திரிகையாளரை கெட்ட வார்த்தையில் திட்டிய அமெரிக்க அதிபர்- வைரலாகும் வீடியோ

Published On 2022-01-25 03:45 GMT   |   Update On 2022-01-25 05:07 GMT
பணவீக்கம் குறித்து தவறான தரவுகளை தான் ஜோ பைடன் விமர்சித்தார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கெட்ட வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுத்தபோது அவருக்கு இருந்த ஆதரவு தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபா் ஜோ பைடனின் செல்வாக்கு 54% காணப்பட்டது, டிசம்பா் கடைசி வாரத்தில் அவரது செல்வாக்கு இதுவரை இல்லாத அளவு 41%-ஆக சரிந்தது.

மசோதாக்களை நிறைவேற்றுவது, அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஜோ பைடன் ஆட்சி தடுமாறுவது தான் அவரது செல்வாக்கு சரிவதற்கு காரணம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஜோ பைடனுக்கு களங்கம் விளைவிக்கும் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

அப்போது மைக் ஆனில் இருந்தபோதே ஜோ பைடன் அவரை கெட்ட வார்த்தையில் திட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜோபைடன் தரப்பு கூறுகையில், பணவீக்கம் குறித்து தவறான தரவுகளை வைத்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அந்த தகவலை விமர்சிக்கும் வகையில் தான் ஜோ பைடன் பேசினார். 

பத்திரிகையாளரை அவர் தனிப்பட்ட முறையில் திட்டவில்லை. ஜோ பைடனே பத்திரிகையாளரை தொடர்புகொண்டு பேசிவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News