செய்திகள்
திருப்பதி

ராமர் கோவில் கட்ட ரூ.100 கோடி வழங்கும் திருப்பதி தேவாஸ்தானம் -வைரல் பதிவுகள் உண்மையா?

Published On 2019-11-15 06:15 GMT   |   Update On 2019-11-15 06:15 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு திருப்பதி தேவஸ்தானம் ரூ.100 கோடி வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகிறது.



அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 100 கோடி வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் நவம்பர் 9-ம் தேதி அனுமதி அளித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் ‘அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். அந்த அறக்கட்டளையிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படவேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.



இதைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் நன்கொடை வழங்குவதாக ஃபேஸ்புக்கில் தகவல் பரவ துவங்கியது. இந்த தகவல் வைரலான நிலையில், ராமர் கோவில் கட்ட ரூ. 100 கோடி நன்கொடை வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

இதுதவிர, ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை இதுவரை உருவாக்கப்படவில்லை. ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு யார் நிதியுதவி வழங்குவது என இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், கோவில் கட்டுமான பணிகளுக்கு பல்வேறு அமைப்புகள் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News