ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

பாவங்களை போக்கும் பிரார்த்தனை

Published On 2021-05-03 04:54 GMT   |   Update On 2021-05-03 04:54 GMT
நரகத்தில் வழங்கப்படும் உணவும், பானமும் மிகவும் மோசமாக இருக்கும்; தண்டனை அதைவிட கொடியதாகும். ‘சீழ்நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை; குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்’. (திருக்குர்ஆன் 69:36,37)
மகத்துவமிக்க ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இத்க்’ - ‘நரகத்தின் விடுதலை மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

மனிதன் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படுபவன். கஷ்டமான வாழ்க்கையை அவன் கடுகளவு கூட விரும்பமாட்டான். எனவே தான் உலகில் வேதனையும், சோதனையும் வரும்போதெல்லாம், ‘இது நரக வேதனையாக உள்ளது’ என்று அழுது புலம்புவான்.

குற்றவாளிகளுக்கு உலகில் வழங்கப்படும் தண்டனை சிறைச்சாலை. அங்கு நிம்மதியாக உண்ண, உறங்க முடியாது. அங்கே கொசுக்கடி உண்டு; தர்மஅடியும் தாராளம் உண்டு. இதுபோன்று பாவிகளுக்கு மறுஉலகில் வழங்கப்படும் தண்டனை நரகம் ஆகும். நரகத்தில் அளிக்கப்படும் தண்டனை விபரம் வருமாறு:

நரகத்தில் வழங்கப்படும் உணவும், பானமும் மிகவும் மோசமாக இருக்கும்; தண்டனை அதைவிட கொடியதாகும். ‘சீழ்நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை; குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்’. (திருக்குர்ஆன் 69:36,37)

‘கொதிக்கும் ஊற்றிலிருந்து, நீர் புகட்டப்படும், அவர்களுக்கு விஷச்செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களை கொழுக்கவும் வைக்காது; பசியையும் தணிக்காது’. (திருக்குர்ஆன் 88:5,6,7)

‘உங்களுடைய (உலக) நெருப்பு, நரகத்தின் நெருப்பிலிருந்து எழுபது பங்கில் ஒரு பங்கு ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

‘ஒரு கல் நரகத்தின் படுகுழியில் போடப்பட்டது; எழுபது வருடங்கள் ஆகியும் அது இன்னும் சேரவில்லை என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: உத்பாபின் ஹிஸ்வான் (ரலி), நூல்: முஸ்லிம்)

இத்தகைய நரகிலிருந்து விடுதலை பெற வைக்கும் மகத்துவமிக்கது தான் ரமலான் மாத நோன்பு ஆகும்.

‘ரமலான் வந்துவிட்டால், நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன’. (நூல்: புகாரி)

‘ரமலானின் ஒவ்வொரு இரவிலும், பகலிலும் நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது’. (நூல்: அஹ்மது)

‘நோன்பு நரகத்தை விட்டு பாதுகாக்கும் ஒரு கேடயம்’. (நபிமொழி)

‘மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது, சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

‘மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்கு தண்டனையாக நரகத்தில் நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு அல்லாஹ் அவர்களைத் தன் தனிக்கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை அடைந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

‘ரமலானின் கடைசிப் (பத்து) பகுதி நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்’. (நபிமொழி)

எனவே, அந்த கடைசிப் பத்து நாட்களில் பின்வரும் பிரார்த்தனையை செய்வோம். ‘அல்லாஹூம்ம அஃதிக்னா மினன்னாரி, வஅத்கில்னல் ஜன்னத யாரப்பல் ஆலமீன்’. இதன் பொருள்: ‘அகில உலக ரட்சகனே, நரகத்தில் இருந்து எங்களை காப்பாற்றி, சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக’.

ரமலான் நோன்பு நோற்று, இந்த பிரார்த்தனையும் புரிந்து நரகத்தில் இருந்து நாம் விடுதலை பெறுவோமாக, ஆமின்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

இப்தார்: மாலை 6.39 மணி

நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.25 மணி
Tags:    

Similar News