உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரணியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் .

மணல் குவாரியை தடை செய்ய வேண்டி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

Published On 2022-05-06 09:23 GMT   |   Update On 2022-05-06 09:23 GMT
மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியை தடை செய்ய வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளை தடைசெய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட கலெக்டரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேலன், ரவிச்சந்தி ரன், வெண்ணிலா, விஜயகாந்த், இயற்கை விவசாயி மாப்படுகை அ.ராமலிங்கம், சீர்காழி ஒன்றிய செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர செயலாளர், செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.தமிழகத்தின் ஏராளமான மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள கொள்ளிடம் ஆற்றில் (மாதிரவேளூர், வடரங்கம்) சட்டவிரோதமாக அமைக்க ப்பட்டுள்ள மணல்குவாரிகள் அதிக ஆழத்திற்கும் மேல் மணல் வளத்தை இரவு, பகலாக கொள்ளையடித்து வருகின்றன. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் சட்டவிரோத குவாரிகளின் விதிமீறல்களை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

நடவடிக்கை இல்லாத நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கும் போதே குவாரியின் ஏஜெண்டாக உள்ள பாமக பிரமுகர் லண்டன் அன்பழகன் என்பவர் சிலருடன் வந்து பொதுமக்களின் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கொள்ளிடம் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தை நடத்திய பிறகும், மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் இதுவரையிலும் சட்டவிரோதமாக செயல்படும் மணல்குவா ரிகளை மூட நடவடிக்கை எடுக்காத நிலையில் முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுப்பட்டனர்.விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் பாதுகாத்திட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய், கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணிகளை துரிதப்படுத்து, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் மாவட்ட மக்களுக்கு குடிநீரை உத்திரவாதப்படுத்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மணல் குவாரிகள் அமைத்து மணல் திருட்டு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இல்லை எனில் ஆற்றில் மணல் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்தி ஆற்றில் இறங்கி போராட்டத்தை நடத்துவோம் என மத்தியக் குழுவினர் அறிவித்தனர்.

Tags:    

Similar News