செய்திகள்
கோப்புபடம்

வாக்கு எண்ணும் பணியை முன்னிட்டு வேட்பாளர்கள், முகவர்கள் 1,035 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-04-29 14:12 GMT   |   Update On 2021-04-29 14:12 GMT
தேனி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு வருகை தர உள்ள வேட்பாளர்கள், முகவர்கள் 1,035 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தேனி:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், வருகிற 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதனால், வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்று காண்பிக்க வேண்டும் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 74 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தடுப்பூசி செலுத்தாத வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்று நடத்தப்பட்டது. சட்டமன்ற தொகுதி வாரியாக மாவட்டத்தில் 4 இடங்களில் பரிசோதனை நடந்தது. இதற்காக வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் பரிசோதனை நடத்தும் இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

காலை முதல் மாலை வரை இந்த பரிசோதனை நடந்தது. இதில் தொகுதி வாரியாக ஆண்டிப்பட்டியில் 202 பேர், பெரியகுளத்தில் 210 பேர், போடியில் 384 பேர், கம்பத்தில் 239 பேர் என மொத்தம் 1,035 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அவை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவு இன்று (வியாழக்கிழமை) வெளியாகும்.

விடுபட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு இன்று பரிசோதனை நடத்தப்படுகிறது. அத்துடன் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பத்திரிகையாளர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடக்கிறது. இந்த பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News