செய்திகள்
தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களை காணலாம்.

திண்டுக்கல் அருகே 17-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு

Published On 2021-09-15 09:53 GMT   |   Update On 2021-09-15 09:53 GMT
திண்டுக்கல் அருகே தொல்லியல் கள ஆய்வின்போது 17-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:

தேனி மாவட்டம் போடி ஏல விவசாய சங்க கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் மாவட்டம் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, வரலாற்று ஆசிரியர் கருப்பையா ஆகியோர் தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் சார்ந்த கள ஆய்வு குறித்து பயிற்சி அளித்தனர்.

அப்போது 17-ம் நுற்றாண்டை சேர்ந்த 2 நினைவு நடுகற்களை மாணவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து பேராசிரியர் மாணிக்கராஜ் கூறுகையில், சித்தையன்கோட்டை அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டி பகுதியில் ஆய்வு செய்தபோது இருவிதமான நினைவு நடுகற்கள் கண்டறியப்பட்டன. ஒரு நடுகல் 2 நிலை அடுக்குகளை கொண்டிருந்தது. அந்த கல்லின் முன்பக்கம் உள்ள கீழ் அடுக்கில் வீரன் ஒருவன் தன் மனைவியுடன் நிற்பதை புடைப்பு சிற்பமாக செதுக்கி உள்ளனர்.

வீரனின் வலது கையில் துப்பாக்கியும், அவரது மனைவி கையில் தீப்பந்தம் பிடித்தபடியும் சிற்பம் உள்ளது. இருவருக்கும் நாயக்கர்கால மக்கள் அணியும் கொண்டை அமைப்பு இருந்தது. சதி செய்து இறக்கும் பெண்களின் நினைவாக செதுக்கப்படும் கல்லில் அவர்களின் கைகளில் தீப்பந்தம் காட்டப்பட்டிருக்கும் என்பதால் இது சதிக்கல் வகையை சேர்ந்ததாகும்.

இதே பகுதியில் மற்றொரு நினைவு நடுகல் சமூகத்தில் உயர்ந்தவர்கள் அல்லது குறுநில மன்னர்கள் அணியும் தலைப்பாகையுடன் ஒரு ஆண் தன் மனைவியருடன் கைகளை கூப்பி வணங்கிய நிலையில் காணப்படுகிறது. இவர்கள் குறுநில மன்னர்கள் அல்லது சமூகத்தில் நல்ல மனிதர்களாக இருந்திருக்கலாம். அவர்கள் நினைவாக நடுகல் செதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.



Tags:    

Similar News