செய்திகள்
திட்டக்குடியில் விவசாயிகள் மரத்தில் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

திட்டக்குடியில் மரத்தில் ஏறி நின்று வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-09 17:27 GMT   |   Update On 2021-01-09 17:27 GMT
திட்டக்குடியில் மரத்தில் ஏறி நின்று வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி:

திட்டக்குடியில் வெலிங்டன் ஏரி உள்ளது. 30 கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 25.30 கன அடி தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் இருந்து தண்ணீரை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் வெலிங்டன் ஏரி பாசன சிறு, குறு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியை சேர்ந்த ஆதிதிராவிட விவசாயிகளை அழைக்கவில்லை. இதுகுறித்து திட்டக்குடி தாசில்தார் சையத் அபுதாகிரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியை சேர்ந்த ஆதிதிராவிட விவசாயிகள் நேற்று காலை தாலுகா அலுவலகம் முன்பு உள்ள மரத்தின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை மரத்தில் இருந்து இறங்க மாட்டோம் என்று கூறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தாசில்தார் சையது அபுதாகிர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் விவசாயிகள் மரத்தில் இருந்து கீழே இறங்கினர். தொடர்ந்து தாசில்தார் சையது அபுதாகிர், திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று விவசாய சங்கத்தினர் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News