செய்திகள்
கைது செய்யப்பட்ட 3 பேரை காணலாம்

கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது

Published On 2020-10-21 09:28 GMT   |   Update On 2020-10-21 09:28 GMT
சூலூர் அருகே கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூலூர்:

சிவகங்கை மாவட்டம் தெக்கூர் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் குமார் (வயது 21). இவர் தற்போது கோவை சூலூரை அடுத்த கொள்ளுபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நரேஷ் குமார் தனது அறையில் வைத்திருந்த செல்போனை காணவில்லை என சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் சூலூர் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில், சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சூலூர் அடுத்த சங்கோதிபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ஸ்கூட்டரில் 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

உடனே அவர்களை சூலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை தி.நகரை சேர்ந்த கவுதம் (22), கண்ணம்மாபேட்டையை சேர்ந்த விஜயபிரசாந்த் (22), வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பதும், இவர்கள் 3 பேரும் சூலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் செல்போன்களை பறித்து வந்த கும்பல் என போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் இவர்கள் தான் நரேஷ் குமாரின் செல்போனையும் திருடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதில், கவுதம் என்பவர் எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்துள்ளார். மேலும் இவர்கள் 3 பேரும் சூலூர் அருகே அறை எடுத்து தங்கியிருந்ததும், ஏற்கனவே 3 பேர்களும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல திருட்டு வழக்கில் தொடர்புடையதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மீது சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழிப்பறியில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு, வழிப்பறியில் சென்னையை கலக்கிய வந்தவர்கள் கோவையில் போலீசாரிடம் சிக்கினர்.
Tags:    

Similar News