செய்திகள்
தமயந்தி பென் மோடி

பிரதமர் மோடியின் தம்பி மகளிடம் வழிப்பறி செய்த ஆசாமிகளில் ஒருவர் கைது

Published On 2019-10-13 08:54 GMT   |   Update On 2019-10-13 09:11 GMT
டெல்லியில் பிரதமர் மோடியின் தம்பி மகளிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி. இவர் குஜராத் மாநிலத்தில் நியாய விலைக் கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.
 
பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி. இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை டெல்லி வந்திருந்தார்.

மாலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கு செல்லும் விமானத்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்த தமயந்தி, சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்வதற்காக வடக்கு டெல்லியில் உள்ள குஜராத் சமாஜ் பவனுக்கு ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் வந்தார்.

ஆட்டோவில் இருந்து இறங்கியபோது அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த இருவர் தமயந்தி கையில் இருந்த பணப்பையை பறித்துச் சென்றனர்.

அந்த பையில் தனது கைபேசி, பணம் மற்றும் சில முக்கியமான ஆவணங்கள் இருந்ததாக குறிப்பிட்டு டெல்லி போலீசாரிடம் தமயந்தி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், பிரதமரின் உறவினர் தமயந்தி பென் மோடியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நோனு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து தமயந்தியின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சமீப காலங்களாக நாட்டின் தலைநகர் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்களிடம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News