வழிபாடு
நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை காண்பித்ததை படத்தில் காணலாம்.

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-12-21 08:26 GMT   |   Update On 2021-12-21 08:26 GMT
பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன், பிடாரி அம்மன் ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதையடுத்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தங்க நகைகள், மலர்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கலச பூஜையுடன் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு 24 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன், பிடாரி அம்மன் ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதையடுத்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தங்க நகைகள், மலர்களால் அலங்காரம் செய்து, மதியம் 12.30 மணி அளவில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதன்பிறகு மண்டபத்தில் இருந்து சாமி புறப்பட்டு, ஆனந்த நடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதையடுத்து கோபுர தரிசனம் நடைபெற்று, ஆலய முன் மண்டபத்தில் சாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுடன் மூலஸ்தானத்திற்கு சென்றார். பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜன் தலைமையிலான குருக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News