உள்ளூர் செய்திகள்
பறவைகள் கணக்கெடுப்பை கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.

தூத்துக்குடியில் 2-வது நாளாக நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு

Published On 2022-01-29 07:54 GMT   |   Update On 2022-01-29 07:54 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடலோர பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் காணப்படும் நீர்வாழ் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு பணி இன்று 2-வது நாளாக நடைபெற்றது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடலோர பகுதிகளில் உள்ள  நீர்நிலைகளில் காணப்படும் நீர்வாழ் பறவைகள் குறித்து கணக் கெடுப்பு பணி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு  பணி  நேற்று தொடங்கியது. மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரக அலுவலர் ரகுவரன் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் தலைமையில் தொடங்கியது.

நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக மும்பையில் இருந்து இயற்கை மற்றும் வரலாற்று மையத்தை சேர்ந்த விஞ்ஞானி பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர்.   

வனத்துறையினருடன் தன்னார்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணியை மேற்கொள்கின்றனர். இந்த பணிகள் இன்று 
2-வது நாளாக நடைபெற்றது. 

வனத்துறையினர், தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள் 5 குழுக்களாக பிரிந்து தூத்துக்குடி முள்ளக்காடு பகுதி, முயல்தீவு, ரோச் பூங்கா பகுதி, பழைய காயல் பகுதி, மணப்பாடு, வேப்பலோடை, வேம்பார் உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. 

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நீர்வாழ் பறவைகள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. 

குறிப்பாக ரஷ்யா, கஜகஸ்தான், ஆஸ்திரேலியா பகுதிகளில் காணப்படக்கூடிய பறவைகள் அதிக அளவில் தூத்துக்குடிக்கு வந்து உள்ளன. நாரைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன.

 மேலும் பொன்நிற உப்பு கொத்தி, வெண்மார்பு உப்புகொத்தி,  அரிவாள் மூக்கு உல்லான்,  சின்னமூக்கு உல்லான், பேதை உல்லான், மஞ்சள் கொத்தி உல்லான், ஆத்து மண்கொத்தி, பச்சைக்கான் உல்லான், சங்கு வளை நாரை, கரண்டி வாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும் காணப்படுகின்றன. 

இந்த பறவைகளின் எண்ணிக்கை விபரம் 2 நாட்களுக்கு பின்பு தெரியவரும்.  தூத்துக்குடி மாவட்டத்தில் வனத்துறையினர் ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு முன்பு முன்னோட்டமாக பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி உள்ளனர்.
Tags:    

Similar News