செய்திகள்
கோப்புபடம்

விசைத்தறியாளர்களுக்கான பொது பயன்பாட்டு மையம் - விரைவில் கட்டிடப்பணிகள் தொடக்கம்

Published On 2021-10-13 07:14 GMT   |   Update On 2021-10-13 07:14 GMT
மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பல்லடத்தில் பொது பயன்பாட்டு மையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. இவை அகமதாபாத், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனையாகின்றன.

இந்த செயல்பாடுகளை இங்கேயே மேற்கொள்வதன் மூலம் விசைத்தறி தொழில் சார்ந்தவர்கள் பயனடைவர் என்பதால் பல்லடத்தில் பொது பயன்பாட்டு மையம் அமைக்க  விசைத்தறியாளர்கள் வலியுறுத்தினர். 

மத்திய மாநில அரசுகள் இதற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பல்லடத்தில் பொது பயன்பாட்டு மையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இது குறித்த முதலீட்டாளர்கள் ஆலோசனை கூட்டம்  நடந்தது. முதலீட்டாளர்கள் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இயக்குனர்கள் முத்துக்குமாரசாமி, பூபதி, பாலு, கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

பொது பயன்பாட்டு மையத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் 55 பேர் முதலீட்டாளர்களாக உள்ளனர். மத்திய அரசு நிதி ரூ. 11.53 கோடி, மாநில அரசின் ரூ.1.76 கோடி மற்றும் விசைத்தறியாளரின் பங்கு ரூ.4.30 கோடி ஆகியவற்றுடன் ரூ.17.59 கோடி செலவில் பொது பயன்பாட்டு மையம் அமைய உள்ளது. 

இதற்காக கேத்தனூரில் உள்ள 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசின் அனுமதி கிடைத்த நிலையில் தற்போது கட்டிட அனுமதியும் பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் மாநில அரசு ரூ.1.76 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது.

தொடர்ந்து கட்டிட பொறியாளர்களுடன் ஆலோசித்து மதிப்பீடு கோரப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் பூமி பூஜையுடன் பொது பயன்பாட்டு மைய கட்டுமான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News