செய்திகள்
கோப்புபடம்

கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

Published On 2021-07-17 08:56 GMT   |   Update On 2021-07-17 08:56 GMT
மழை பெய்து வருவதால் ஆடுகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து வாய் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
மூலனூர்:

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். 

அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இதுபற்றி மூலனூர் சின்னாறு வலசு சுரேஷ் கூறுகையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக மூன்று சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் ஆடுகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து வாய் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஆடுகளை அதிக அளவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சந்தையில் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை திருப்பி கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது .

இதனால் மூலனூர் மற்றும் கன்னிவாடி சுற்றுவட்டார பகுதிகளில் வாய்சப்பை நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு கால்நடை துறையினர் தடுப்பு மருந்து கொடுத்து நோயில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும் இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிகமானதால் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது. சென்ற வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் அதே ஆடு ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது என்றார்.
Tags:    

Similar News