செய்திகள்
கொள்ளை

கீழக்கரையில் நள்ளிரவில் அரிவாளை காட்டி மிரட்டி பெட்ரோல் பங்க்கில் ரூ.2½ லட்சம் கொள்ளை

Published On 2021-09-10 10:12 GMT   |   Update On 2021-09-10 10:12 GMT
கீழக்கரையில் நள்ளிரவில் அரிவாளை காட்டி மிரட்டி பெட்ரோல் பங்க்கில் ரூ.2½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே சேக் உசேன் என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.

இங்கு கீழக்கரையை சேர்ந்த மானேஜர் ஜாஹிர் கருணை (வயது 33), வசந்தகுமார் (23), தினேஷ் ராஜா (25) ஆகிய 3 பேரும் நேற்று இரவு பணியில் இருந்தனர்.

அப்போது முக கவசம் அணிந்த நிலையில் ஜிப்பா உடை அணிந்து, முகம் தெரியாத அளவுககு தலையில் துணியை கட்டிய படி மோட்டார் சைக்கிளில் 3 பேர் பெட்ரோல் நிலையம் வந்தனர்.

ஊழியர்கள் அவர்களது வாகனத்துக்கு பெட்ரோல் போட முயன்றபோது 3 பேரில் 2 பேர் திடீரென அரிவாளை எடுத்து மிரட்டி அங்கிருந்த மேஜையை அடித்து நொறுக்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் 3 பேரும் உயிர் பிழைத்தால் போதும் என்று பெட்ரோல் நிலையத்தை விட்டு தப்பி ஓடினர்.

இதையடுத்து மூகமூடி அணிந்த கொள்ளையர்கள் பெட்ரோல் பங்க்கில் இருந்த ரூ. 2.½ லட்சம் மற்றும் லேப்-டாப் ஆகியவைகளை எடுத்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதுபற்றி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மொபைல் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. உடனே அந்த பகுதியில் உள்ள மக்கள் திரண்டனர். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கீழக்கரை டி.எஸ்.பி. சுபாஷ், இன்ஸ்பெக்டர் பாலமுரளி, தனிப்பிரிவு எஸ்.ஐ. செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளையர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லாமல் மாற்று வழியாக தப்பிச் சென்றனர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல் பங்க்கில் கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்..

Tags:    

Similar News