வழிபாடு
ஹம்ச வாகன சேவை நடந்தபோது எடுத்தபடம்.

பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: சிறியசேஷ, ஹம்ச வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வரசாமி

Published On 2022-02-22 04:02 GMT   |   Update On 2022-02-22 04:02 GMT
சீனிவாசமங்காபுரம் கோவில் பிரம்மோற்சவ விழா 2-வது நாளான நேற்று சிறிய சேஷ வாகனச் சேவை, இரவு ஹம்ச வாகனச் சேவை நடந்தது.
சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி ‘முரளிகிருஷ்ணடு’ அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதைத்தொடர்ந்து காலை 10.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை உற்சவர்களான கல்யாணவெங்கடேஸ்வரசாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி சரஸ்வதி அலங்காரத்தில் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிம்ம வாகனச் சேவையும், இரவு முத்துப்பந்தல் வாகனச் சேவையும் நடக்கிறது.
Tags:    

Similar News