செய்திகள்
மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடுரோட்டில் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-09-09 12:36 GMT   |   Update On 2019-09-09 12:36 GMT
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே தாயும், மகனும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.

இதையொட்டி பிரதான நுழைவு வாயிலில் நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த சம்பூர்ணம் (வயது 65) மற்றும் இவரது மகன் பூமாலை (48) ஆகியோர் தீக்குளிப்பதற்காக கலெக்டர் அலுவலகம் எதிரே நடுரோட்டில் நின்று தங்கள் தலையில் மண்எண்ணை ஊற்றினர்.

உடனே இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து, அக்கம், பக்கத்தில் உள்ள கடைகளில் இருந்து குடத்தை வாங்கி அதில் இருந்த தண்ணீரை சம்பூர்ணம், பூமாலை ஆகியோர் உடலில் ஊற்றி, தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள்.

இருவரையும் நல்லிப்பாளையம் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் நிலத்திற்கும், பக்கத்து தோட்டத்துக்காரர் நிலத்திற்கும் இடையே வழித்தட பிரச்சினை இருந்து வருகிறது. பக்கத்து தோட்டத்துக்காரர், அவர்களுக்கு வழித்தடம் கொடுக்க மறுத்து வருகிறார். இது குறித்து புகார் கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

கலெக்டர் அலுவலகம் எதிரே தாயும், மகனும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News