செய்திகள்
தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் அதிரடி: விஜய் ஹசாரே டிராபியில் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்தது தமிழ்நாடு

Published On 2019-10-01 13:50 GMT   |   Update On 2019-10-01 13:50 GMT
தினேஷ் கார்த்திக் 62 பந்தில் 97 ரன்கள் விளாச, விஜய் ஹசாரே டிராபியில் இந்தியா தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை ருசித்துள்ளது.
விஜய் ஹசாரே டிராபியில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்கால் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் ஜெகதீசன், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஜெகதீசன் 8 ரன்னிலும், அபிநவ் முகுந்த் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பாபா அபரஜித் 34 ரன்கள் சேர்த்தாலும், ஹரி நிஷாந்த் 8 ரன்னில் வெளியேறினார்.

83 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்த நிலையில், ஐந்தாவது விக்கட்டுக்கு விஜய் சங்கர் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. விஜய் சங்கர் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து தினேஷ் கார்த்திக் உடன் ஷாருக் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தினேஷ் கார்த்திக் 62 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் - ஷாருக் கான் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 12.3 ஓவர்களில் 153 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் 45 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க தமிழ்நாடு 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது.

பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களம் இறங்கியது. முதல் நான்கு வீரர்களையும் ஒற்றையிலக்க ரன்னில் தமிழ்நாடு பந்து வீச்சாளர்களான நடராஜன், விக்னேஷ் ஆகியோ் வெளியேற்றினர்.

இதனால் பெங்கால் அணி 21 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. ஷபாஸ் அகமது 107 ரன்கள் அடித்தாலும், அந்த அணி 212 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு அணி சார்பில் பாபா அபரஜித், கே. விக்னேஷ், டி நடராஜன், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை ருசித்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இடம்பிடித்துள்ள மற்றொரு அணியான குஜராத் அணியும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
Tags:    

Similar News