செய்திகள்
ஐயப்பா துரே

பெங்களூரில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை

Published On 2019-10-17 08:50 GMT   |   Update On 2019-10-17 08:50 GMT
பெங்களூரில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:

பெங்களூரு ஆர்.பி. நகரைச் சேர்ந்தவர் ஐயப்பா துரே (53). இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவர் தினமும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனது வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபயிற்சி செய்துவிட்டு வீட்டில் வந்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு ஐயப்பா துரே தனது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, நடைபயிற்சிக்கு சென்றார்.

நீண்ட நேரம் ஆன பிறகும் அவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை கண் விழித்த அவருடைய மனைவி பாவனா கணவரை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள எச்.எம்.டி. மைதானத்தில் ஐயப்பா துரே ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டியும், கூர்மையான ஆயுதங்களால் குத்தியும் படுகொலை செய்தது தெரிய வந்தது.

கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஐயப்பா துரே துணைவேந்தராக இருந்த பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அவருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

ஐயப்பா துரே துணைவேந்தர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மேலும் லிங்காயத் தனி மத அங்கீகாரம் தொடர்பான போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

‘ஜன சாமான்யா’ கட்சியை தொடங்கிய அவர் கடந்த சட்டசபை தேர்தலில் முத்தே பீகார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாகவும் அவருக்கு சிலருடன் விரோதம் இருந்துள்ளது. எனவே பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News