செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தடுப்பூசிகள், மருந்துகளை மத்திய அரசு ஓரிரு நாட்களில் வழங்கும்- ஐகோர்ட்டு நம்பிக்கை

Published On 2021-05-01 03:36 GMT   |   Update On 2021-05-01 03:36 GMT
தமிழகத்தில் 1.12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 29 ஆயிரத்து 367 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 196 படுக்கைகளும் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களில் மத்திய அரசு வழங்கும் என்று நம்புவதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வேகமாக பரவிவரும் 2-வது கொரோனா அலையால் தமிழகத்தில் பாதிப்பு கடுமையாக உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தநிலையில், தடுப்பூசி, ரெம்டெசிவர், ஆக்சிஜன் பற்றாக்குறைகள் குறித்த பத்திரிகை செய்தி அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், தமிழகத்தில் 1.12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 29 ஆயிரத்து 367 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 196 படுக்கைகளும் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.



மராட்டியம், கேரளா போன்ற வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் மற்றும், பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் நிலையில் 59 ஆயிரம் குப்பிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, “2020-ம் ஆண்டு டிசம்பரில் இருந்த நிலைமையைவிட 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தாக்கம் மராட்டியம், கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிகரித்தது. இதையடுத்து, ஜனவரி 5-ந்தேதி அந்த மாநிலங்களிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. ஜனவரி 7-ந்தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியது. தேவைப்படும் மாநிலங்களுக்கான கொரோனா தடுப்பு
நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

அப்போது, நீதிபதிகள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை அதிகரிப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

இதன்பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்திற்கு தேவைப்படும் ரெம்டெசிவர் மருந்து குறைவாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 36 ஆயிரத்து 223 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளும், 7 ஆயிரத்து 405 அவசர சிகிச்சை வார்டுகளும், 865 வென்டிலேட்டர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் தேவை 385 மெட்ரிக் டன் என்றும் இந்த அளவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உற்பத்தி செய்யப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்திற்கு தேவையான கொரோனா சிகிச்சை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓரிரு நாட்களில் தடுப்பூசிகளை மத்திய அரசு தரும் என்று நம்புகிறோம். மே 3-ந்தேதிக்குள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நகர்புறங்களில் தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பை போல் கிராமப்புறங்களிலும் மக்களிடமும் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இந்த வழக்கை 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
Tags:    

Similar News