ஆன்மிகம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

ஆனி மாத பவுர்ணமி: பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய கிரிவலப்பாதை

Published On 2021-06-24 06:27 GMT   |   Update On 2021-06-24 06:27 GMT
கிரிவலம் செல்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர்கள் கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்கின்றனர். இவ்வாறு ஒரு சில பக்தர்கள் மட்டுமே செல்வதால் அவர்களை போலீசாரால் முழுமையாக தடுக்க முடியவில்லை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனி மாதத்திற்கான பவுர்ணமி காலம் இன்று காலை 3.32 மணிக்கு தொடங்கி இரவு 12.09 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று ஏற்கனவே கலெக்டர் அறிவித்தார்.

அதன்படி கிரிவலப் பாதையில் போலீசார் தடுப்புகள் வைத்து இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுத்து வருகின்றனர். அந்த வழியாக செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிரிவலம் செல்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர்கள் கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்கின்றனர். இவ்வாறு ஒரு சில பக்தர்கள் மட்டுமே செல்வதால் அவர்களை போலீசாரால் முழுமையாக தடுக்க முடியவில்லை.

அஷ்ட லிங்க சன்னதிகள் மற்றும் ஆசிரமங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் பக்தர்கள் அண்ணாமலையை சுற்றி வந்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

பக்தர்கள் வருகை இல்லாததால் கிரிவலப் பாதையில் தங்கியிருக்கும் சாதுக்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

கிரிவலப்பாதையில் பவுர்ணமி காலங்களில் வியாபாரம் செய்து பிழைத்து வந்த சிறு வியாபாரிகளும் ஊரை காலி செய்து விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

மேலும் கிரிவல பாதையில் பலகாரங்கள் செய்து விற்பனை செய்து வந்த கிராம பெண்களும் அந்த தொழிலை செய்ய முடியாமல் வருமானமின்றி வாடுகின்றனர். பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் பயணிகள் யாரும் வரவில்லை.

திருவண்ணாமலையில் தினமும் கிரிவலம்செல்லும் பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

சிலர் நடந்தும் சிலர் சைக்கிளிலும் சென்று வருவார்கள். அவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில்
கிரிவலம் சென்று வருவது வழக்கம்.

ஊரடங்கால் அவர்களும் கிரிவலம் செல்ல முடியாமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News