செய்திகள்
மேலூரில் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்

தமிழகத்தில் துரோகம் விளைவித்த அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் - டிடிவி தினகரன் பிரசாரம்

Published On 2021-03-31 08:37 GMT   |   Update On 2021-03-31 08:37 GMT
தமிழகத்தில் நல்லாட்சி நடந்திட, ஊழலற்ற ஆட்சி மலர்ந்திட எல்லோருக்கும் பொதுவான மற்றும் வெளிப்படையான ஆட்சி அமைந்திட குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என திருப்பத்துரில் டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார்.

திருப்பத்துர்:

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தினகரன் பேசியதாவது:-

திருப்பத்தூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றி தரப்படும். எஸ்.புதூர், சிங்கம்புணரி மையப் பகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும்.

அரசு தொழில் மையம் மற்றும் காய்கறி குளிர்பதன கிடங்கு, கரும்பு சர்க்கரை பதப்படுத்தும் தொழில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

திருப்பத்தூரில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் விளையாட்டு மைதானங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பத்தூர் தொகுதியில் விடுபட்ட ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அமைத்திடவும், செங்கல் கால்வாய் மண்பாண்ட தொழில்கள் எந்த பிரச்சினையும் இன்றி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப்பகுதியில் கயிறு தொழில் வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்த எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.


தமிழகத்தில் நல்லாட்சி நடந்திட, ஊழலற்ற ஆட்சி மலர்ந்திட எல்லோருக்கும் பொதுவான மற்றும் வெளிப்படையான ஆட்சி அமைந்திட குக்கர் சின்னத்தில் வாக்களித்து அமோகமாக வெற்றிபெறச் செய்யுங்கள்.

மேலூரில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உதயமானது. எனது ஆருயிர் நன்பர் சாமி மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி. தற்போது அவர் இல்லை. இருந்திருந்தால் மதுரை மண்டலமே அவரது கட்டுப்பாடில் செயல்பட்டிருக்கும்.

அவர் இல்லாதது எல்லோருக்கும் பெரும் வருத்தமளிக்கிறது.எதிர் காலத்தில் அவரது இடத்தை அவரது மகன் ஆசையன்சாமி நிரப்புவார்.

மேலூர் பகுதி விவசாய பகுதியாகும். கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும். கொட்டாம்பட்டி பகுதிகளில் கால்வாய் பாசனம் அமைக்கப்படும். மகளிர் கலைக்கல்லூரி அமைக்கப்படும். சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்த மேலூர் பகுதி வீரர்களுக்கு நினைவு தூண் அமைக்கப்படும்.

மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை சட்டத்திற்கு உட்பட்டு அரசே திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

Tags:    

Similar News