லைஃப்ஸ்டைல்
தோல் வெண்மை கிரீம் அபாயம்

தோல் வெண்மை கிரீம் அபாயம்

Published On 2019-10-12 02:15 GMT   |   Update On 2019-10-12 02:15 GMT
தோலை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவரிலிருந்து வண்ணப்பூச்சை நீக்கும் ரசாயனம் போலச் செயல்படும் தோலை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் பறிமுதல் செய்யப்பட்ட இதுபோன்ற கிரீம்களில், வெளுத்துப்போகச் செய்யும் ரசாயனமான ஹைட்ரோகுவினோன் இருந்தது. இந்த கிரீம்களில் சிலசமயம் பாதரசமும் இருக்கலாம்.

இந்த கிரீம்களை தயாரிக்கும்போது அவற்றில் கலக்கப்படும் வேதிப்பொருள் அளவில் கவனக்குறைவாக மாறும் அளவு, நுகர்வோருக்கு உடல்நலரீதியிலான பிரச்சினைகளை உண்டாக்குகிறது. சருமத்தை வெண்மையாக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் இதுபோன்ற தயாரிப்புகளில் இருக்கும் ஹைட்ரோகுவினோன், சுவரிலிருந்து வண்ணப்பூச்சுகளை நீக்கும் ரசாயனத்துக்கு இணையானது என்று இங்கிலாந்தின் எல்.ஜி.ஏ. அமைப்பு எச்சரிக்கை எடுத்துள்ளது.

அதாவது, ஹைட்ரோகுவினோன் கலக்கப்பட்ட கிரீம்களை உபயோகிப்பது சருமத்தின் மேல் அடுக்கையே நீக்குவதால், அதைத் தொடர்ந்து தோல் புற்றுநோய், நுரையீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம். அதே போன்று, பாதரசம் கலக்கப்பட்ட கிரீம்களும் இதே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே, கடுமையான பக்கவிளைவுகள் கொண்ட ஹைட்ரோகுவினோன், ஸ்டீராய்டுகள் அல்லது பாதரசம் கொண்ட கிரீம்கள் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

‘‘தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தோல் கிரீம்களை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. அது உங்களின் தோலை சேதப்படுத்துவதோடு, நோய்கள் ஏற்படவும், மோசமான சூழ்நிலையில் உயிரிழப்பு ஏற்படுவதற்கும்கூட காரணமாகிறது. எனவே, எந்தவகையிலும் இதுபோன்ற கிரீம்களை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று கூறுகிறார், எல்.ஜி.ஏ. அமைப்பின் மக்கள் நலப் பாதுகாப்பு பிரிவின் தலைவர் சைமன் பிளாக்பர்ன்.

‘‘ஒருவேளை, நீங்கள் வாங்கும் தயாரிப்பில், அதில் கலக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்த விளக்கம் தரப்படாவிட்டால், அதை வாங்காமல் இருப்பதே நல்லது’’ என்று அவர் வலியுறுத்துகிறார். அழகுக்கு ஆசைப்பட்டு, ஆபத்தை விலை கொடுத்து வாங்காமல் இருப்பதே நலம்!
Tags:    

Similar News