செய்திகள்
ஆட்டோ வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதையும், அதனை கயிறு கட்டி மீட்பதையும் படத்தில் காணலாம்.

கூடலூர், கோத்தகிரியில் கனமழை: வீடுகள், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது

Published On 2021-10-24 04:46 GMT   |   Update On 2021-10-24 04:46 GMT
குச்சி முச்சி பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ அடித்து செல்லப்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆட்டோவை கயிறு கட்டி மீட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் உள்ள கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழைக்கு சில இடங்களில் மண் சரிவும், மலைப்பாதைகளில் பாறை உருண்டு விழுவதும், மரங்கள் சாய்வதும் வழக்கமாக இருந்தது.

கூடலூர் தாலுகாவில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக தேவர்சோலை, பாடந்தொரை, குச்சிமுச்சி, அஞ்சிகுன்னு, செறுமுள்ளி போன்ற பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியில் வர முடியமால் தவித்தனர். குடியிருப்பை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் மிகவும் அச்சத்துடனேயே காணப்பட்டனர்.

மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பும் உண்டானது. முதுகுளி பகுதியில் மரம் விழுந்ததில் ஒரு வீடு சேதமடைந்தது. குச்சி முச்சி பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ அடித்து செல்லப்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆட்டோவை கயிறு கட்டி மீட்டனர்.

கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. மழைக்கு கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் சாலையின் ஓரத்தில் பாறை ஒன்று சரிந்து நடுரோட்டில் விழுந்தது. இதன் காரணமாக ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு சாலையில் இடம் இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும், நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து வந்து பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 8 செ.மீ மழையும், செருமுள்ளியில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

பந்தலூர்-81, செருமுள்ளி-58, அப்பர் கூடலூர்-35, கொடநாடு-37, சேரங்கோடு-26, கிண்ணக்கொரை-24, நடுவட்டம்-25.
Tags:    

Similar News