செய்திகள்
கொரோனா வைரஸ்

விஜயபாஸ்கரின் மனைவி-மகளுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-10-18 06:50 GMT   |   Update On 2021-10-18 09:19 GMT
விஜயபாஸ்கரின் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி இருப்பது மனித உரிமை மீறலாகும் என்று வழக்கறிஞர் பாபுமுருகவேல் குற்றம் சாட்டினார்.
சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா மற்றும் மூத்த மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இருவரும் தனி அறையில் இருந்தனர்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தகுந்த முன் ஏற்பாடுகளுடன் சோதனையை நடத்தினார்கள். தேவையான அளவு சமூக இடைவெளியை பின்பற்றி கைகளில் கையுறை அணிந்து விசாரணையை மேற்கொண்டனர்.



லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயபாஸ்கரின் வீட்டில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமல் சோதனை நடத்துவதற்கு சென்று விட்டனர்.

சோதனை நடத்துவதற்காக வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான் விஜயபாஸ்கரின் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து உஷார் ஆன லஞ்ச ஒழிப்பு போலீசார் சானிடைசர்களை அதிகம் பயன்படுத்தி முகக்கவசத்தை முறையாக அணிந்து தங்களது விசாரணையை மேற்கொண்டனர்.

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறும் தகவல் கிடைத்ததும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் பாபு முருகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு சென்றனர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை தொடர்பாக கருத்து தெரிவித்த ஆதிராஜாராம், செல்வம் ஆகியோர், “விஜயபாஸ்கரிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன. லஞ்ச ஒழிப்பு சோதனையை சட்டரீதியாக சந்திப்போம். மடியில் கனம் இல்லாததால் வழியில் பயம் இல்லை” என்று தெரிவித்தனர்.

வழக்கறிஞர் பாபுமுருகவேல் கூறும்போது, “முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி இருப்பது மனித உரிமை மீறலாகும்” என்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே விஜயபாஸ்கர் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரும் இன்று நேரில் சென்றனர்.


Tags:    

Similar News