செய்திகள்
கோப்புபடம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

Published On 2020-10-16 13:06 GMT   |   Update On 2020-10-16 13:06 GMT
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
திருவள்ளூர்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா குடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரத் (வயது 28). பா.ஜ.க. மாவட்ட பிரசார அணித்தலைவராக உள்ளார். பி.இ. மெக்கானிக் என்ஜினீயரிங் படித்துள்ளார். இந்த நிலையில் பாரத் காஞ்சீபுரம் மாவட்டம் செங்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தில் தங்கி தினந்தோறும் வேலைக்கு சென்று வந்தார்.

அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வலசைவெட்டிகாடு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும், இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அந்த தனியார் நிறுவனம் பாரத்தை வேலையை விட்டு நிறுத்தியது. அது மட்டுமில்லாமல் செல்வம், பாரத்தை கடுமையாக அடித்து உதைத்து பல வகைகளில் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவர் மணவாளநகர் போலீசில் கடந்த 3 முறை புகார் அளித்தும் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் மனு கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்த அவரை, புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள். இதனால் மன உளைச்சலுக்குள்ளான பாரத் நேற்று மாலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தன்னுடைய உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

இதை கண்ட அங்கு இருந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினார்கள்.

இதுகுறித்து உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலில் பெட்ரோல் ஊற்றிய பாரத்தை அருகிலுள்ள குழாயடிக்கு அழைத்து சென்று அவரை நன்கு தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டினார்கள். பின்னர் வேறு உடையை அளித்தனர். அவரை சமாதானப்படுத்திய போலீசார் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News