செய்திகள்
திண்டுக்கல்லில் இன்று பணிக்கு திரும்பிய ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தினார்

வேலைக்கு வராத 1,273 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - சம்பள உயர்வு, சலுகை கிடைக்காது

Published On 2019-01-30 07:59 GMT   |   Update On 2019-01-30 08:43 GMT
இன்று காலை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “மெமோ” வழங்கப்பட்டு வருகிறது. இந்த குற்ற குறிப்பாணை பெறுபவர்களுக்கு சம்பள உயர்வு, அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. #JactoGeo #Teachers
சென்னை:

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஆசிரியர்களிடையே உள்ள சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ- ஜியோ) கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அவர்களது 9 அம்ச கோரிக்கைகளில் எந்த ஒரு கோரிக்கையையும் ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்தது. ஜாக்டோ-ஜியோ கோரிக்கையால் தமிழக அரசுக்கு எந்த அளவுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதையும் தமிழக அரசு விளக்கமாக கூறியது.

தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். நேற்று 8-வது நாளாக அவர்களது வேலைநிறுத்தம் நீடித்தது. இந்த நிலையில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

“நோ ஒர்க் நோ பே” என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பணிக்கு வராத ஆசிரியர்களின் இடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து வேலைக்கு வராத ஆசிரியர்கள் யார்-யார் என்று கணக்கெடுத்து பட்டியல் தயாரிக்கப்பட்டது.

பொதுத்தேர்வு மற்றும் பயிற்சித்தேர்வு நெருங்குவதால் வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்தி வகுப்புகளை நடத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து சுமார் 50 சதவீதம் பேர் பணிக்கு திரும்பினார்கள். இதையடுத்து போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுமார் 500 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய ஊருக்கு இடமாற்றம் தருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதை ஏற்று மேலும் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினார்கள்.

இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கோர்ட்டில் தங்களுக்கு சாதகமான உத்தரவு வரும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் கோர்ட்டு புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. அதற்கு பதில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் இனி எந்த பேச்சும் நடத்தப்பட மாட்டாது என்று அரசு அறிவித்தது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்குள் பணியில் சேர்ந்தால், அவர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை இறுதி கெடுவாகவும் அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 97 சதவீதம் பேர் பணிக்குத் திரும்பினார்கள். இன்று (புதன்கிழமை) காலை மேலும் 2 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். இதன் மூலம் 99 சதவீத ஆசிரியர்கள் வேலைக்கு வந்துவிட்டனர்.

99 சதவீத ஆசிரியர்கள் வேலைக்குத் திரும்பி விட்டதால் 8 நாட்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளும் இயங்கின. மூடப்பட்டு கிடந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சி தேர்வுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள்.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மட்டுமே இன்று பணிக்கு வரவில்லை. அவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதி 17(பி)ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டுமானால் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்றே சேர முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தவர்களில் 1273 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களையும் சேர்ந்தவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தெரிய வந்துள்ளது.

இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு குடிமைப்பணி விதி 17(பி)ன் கீழ் குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “மெமோ” வழங்கப்பட்டு வருகிறது.

இந்த குற்ற குறிப்பாணை பெறுபவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை பொறுத்தவரை 99 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வந்து விட்டனர். நேற்றிரவு வரை பணிக்கு வராதவர்கள் மீது 17-பி விதியின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று காலையில் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு 17பி-ன்படி “மெமோ” வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மெமோவை பெற்றுக்கொண்டுதான் பணியில் அவர்கள் இன்று சேர முடியும். பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடங்கி விட்டது. இதுவரை 1082 ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்ட நிலை குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது:-

எங்களது போராட்டத்தை அரசு மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறது. முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் கவுரவம் பார்க்கிறார். சுயநலத்திற்காக போராடுவதாக முதல்-அமைச்சரே கூறியுள்ளார். அரசு ஊழியர்-ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக அவரது அறிக்கை உள்ளது.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இன்று பிற்பகல் 3 மணி வரை அழைப்புக்காக காத்திருக்கிறோம்.

முதல்-அமைச்சர் அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்குள்ளாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் இன்று (புதன்கிழமை) மாலை உயர்மட்ட குழு கூடி அடுத்த கட்ட முடிவு குறித்து ஆலோசனை செய்வோம்.

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர். மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை உள்ளது. 1-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க இருப்பதால் கடமையை உணர்ந்து பணிக்கு செல்கிறார்கள்.

ஆனாலும் உரிமைக்காக போராடும் நிலையில் இருந்து அவர்கள் விலகவில்லை. மன ரீதியாக பாதிக்கப்பட்டு அதிருப்தியுடன்தான் ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது இந்த அரசு அடக்குமுறையை கையாண்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரையில் 5 ஆயிரம் பேர் மீது சஸ்பெண்டு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



ஆனாலும் ஜாக்டோ-ஜியோவின் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் டி.எம்.எஸ். அருகில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #Teachers

Tags:    

Similar News