செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

ஸ்வப்னாவுடன் கேரள மந்திரி மகன் தொடர்பு அம்பலம்- புகைப்பட ஆதாரம் வெளியானதால் பரபரப்பு

Published On 2020-09-14 08:04 GMT   |   Update On 2020-09-14 08:04 GMT
தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கும் கேரள மந்திரியின் மகன் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது வழக்கில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் அலுவலகத்திற்கு விமானத்தில் வந்த பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை ஆகிய 3 அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த தங்கக்கடத்தல் சம்பவத்தில் ஸ்வப்னா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சரீத்குமார் சந்திப் நாயர் ரமேஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்வப்னா வி‌ஷயத்தில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் இருந்து வருவது தற்போது அம்பலமாகி வருகிறது. ஏற்கனவே கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினிஷ் கொடியேறிக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

இந்த நிலையில் ஸ்வப்னாவுக்கும் கேரள மந்திரியின் மகன் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு துபாயில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் கேரள அரசின் உதவியுடன் கேரளாவில் உள்ள ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் லைப் மி‌ஷன் திட்டத்திற்காக ரூ. 20 கோடியை நன்கொடையாக வழங்கியது.

இந்த திட்டத்தின் கீழ் வடக்கஞ்சேரி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது இதற்காக ஒப்பந்தம் எடுத்த 2 நிறுவனங்கள் ரூ. 4 கோடியை கமி‌ஷனாக கொடுத்துள்ளன. இந்த தொகையை ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள 2 பேர் உள்பட சிலருக்கு ஸ்வப்னா மூலம் பங்கு போட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கேரளா மந்திரியின் மகன் என தற்போது தெரியவந்துள்ளது

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் வைத்து அந்தப் பணத்தை ஸ்வப்னா மந்திரியின் மகனிற்கு கொடுத்துள்ளார். அப்போது இடைத்தரகர் ஒருவரும் இருந்துள்ளார்.

ஓட்டல் அறையில் நடந்த இந்த சம்பவம் புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளது. ஸ்வப்னாவுடன் மந்திரி மகன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News