செய்திகள்
மந்திரி சுதாகர்

முகக்கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு எப்போது விலக்கு?: மந்திரி சுதாகர் பதில்

Published On 2021-06-25 03:05 GMT   |   Update On 2021-06-25 03:05 GMT
கொரோனா 2-வது அலையில் அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பரவல் அதிகமாக இருந்தாலும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்தது.
பெங்களூரு :

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒன்று மட்டுமே தீர்வு. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் முகக்கவசம்  அணிவதில் இருந்து நாம் விடுபட முடியும். கொரோனா 2-வது அலையில் அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பரவல் அதிகமாக இருந்தாலும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்தது.

அரசு ஆஸ்பத்திரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இருக்கிறோம். 1,760 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த பணியிடங்கள் கடந்த 25 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தன. நிபுணர் குழு பரிந்துரையின்படி மாவட்ட அளவிலும் சுகாதார வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். சிலர்
கொரோனா தடுப்பூசி
குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

இதுபோன்ற தகவல்களை பொதுமக்கள் நம்பக்கூடாது. இதுபோன்ற விஷயங்களில் அரசின் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். சின்ன அம்மை நோய் தடுப்பூசியை நம்ப பொதுமக்கள் நீண்ட காலம் எடுத்துக் கொண்டனர். ஹெபடிடிஸ்-பி தடுப்பூசி இந்தியாவுக்கு வர 20 ஆண்டுகள் ஆனது. ஆனால் கொரோனா வைரசுக்கு எதிராக ஒரே ஆண்டில் தடுப்பூசி கிடைத்துள்ளது.

அதுவும் நமது நாட்டிலும் ஒரு கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதை கண்டு நாம் பெருமைப்பட வேண்டும். இந்த தடுப்பூசி நல்ல செயல் திறன் கொண்டது. இதை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு தடுப்பூசிகளின் விலை அதிகம். பிரதமர் மோடி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்குகிறார். மக்களுடன் அதிகமாக தொடர்பில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதன் அடிப்படையில் வக்கீல்களுக்கு இன்று (நேற்று) தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News