உள்ளூர் செய்திகள்
கொலை

தூத்துக்குடியில் பாழடைந்த அரசு கட்டிடத்தில் தலை துண்டித்து வாலிபர் கொலை

Published On 2022-05-07 04:55 GMT   |   Update On 2022-05-07 04:55 GMT
தூத்துக்குடியில் பாழடைந்த அரசு கட்டிடத்தில் தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் அரசுக்கு சொந்தமான ஒரு கட்டிடம் உள்ளது. பனைவாரிய அலுவலகமாக செயல்பட்டு வந்த இந்த கட்டிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடற்று பராமரிப்பின்றி காணப்படுகிறது.

இந்த கட்டிடத்தின் மாடியில் இன்று காலை சுமார் 35 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தலை, உடல் அருகே ரத்தவெள்ளத்தில் கிடந்தது.

இன்று காலை அங்கு சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. சம்பத், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பமிட்டது.

கொலை செய்யப்பட்ட கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? கொலை செய்யப்பட்ட வாலிபரை அழைத்து வந்து கொலை செய்தனரா? அல்லது கொலை செய்த பின்னர் உடலை இங்கே வீசிச்சென்றனரா? எதற்காக செய்யப்பட்டார்? பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தூத்துக்குடியில் முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாழடைந்து உள்ளதால் இங்கே சமூகவிரோத செயல்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

சிலர் கும்பலாக மதுக்குடித்து வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News