செய்திகள்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி - மீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

Published On 2019-10-22 18:44 GMT   |   Update On 2019-10-22 18:44 GMT
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகிறார்.
டொராண்டோ:

நிலப்பரப்பில் உலகின் 2-வது மிகப்பெரிய நாடாக விளங்கும் கனடாவில் 338 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.

இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, 157 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்கிற நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 13 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.

அந்த வகையில் இந்திய வம்சாவளி சீக்கியரான ஜக்மித் சிங்கின், புதிய ஜனநாயக கட்சி ஆதரவுடன், ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சியமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற புதிய ஜனநாயக கட்சி 20 இடங்களை கைப்பற்றியுள்ளது.

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகிறார். இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News