செய்திகள்
குமாரசாமி

தேசிய ஜனநாயக கூட்டணியில் மத சார்பற்ற ஜனதா தளம் சேருகிறது?: குமாரசாமி

Published On 2021-01-04 01:43 GMT   |   Update On 2021-01-04 01:43 GMT
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சேருவது குறித்து குமாரசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்துவிட்டது என்பது கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது. இது தற்போது பா.ஜனதாவுக்கும் புரிந்துள்ளது. இதனால் கூட்டணி என்ற கபட நாடகத்தை அரங்கேற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சேர உள்ளதாக தவறான தகவலை பா.ஜனதா பரப்பி வருகிறது. இவை எல்லாம் அப்பட்டமான பொய் தகவல்கள்.

நினைவிருக்கட்டும், பிரதமர் மோடியுடன் கர்நாடக பா.ஜனதா தலைவர்களுக்கு இருக்கும் நல்லுறவை விட எனக்கு அதிக நெருக்கம் உள்ளது. எடியூரப்பா மூத்த அரசியல்வாதி என்பதால் அவர் மீது எனக்கு நன்மதிப்பு உள்ளது. எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி இருக்கக்கூடாது என்பதும் எனது எண்ணம். பா.ஜனதா தவறான பிரசாரம் செய்வதால், நல்லுறவு, மரியாதைக்கு பாதகம் ஏற்படும். ஜனதா தளம் (எஸ்) கட்சி விஷயத்தில் பா.ஜனதா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் நட்புறவை வளர்ப்பதாக கருதி எங்கள் கட்சியை உடைக்க பலர் முயற்சி செய்தனர். இப்போது அதில் பா.ஜனதாவினரும் சேர்ந்து கொண்டுள்ளனர். பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எங்கள் கட்சியை சேர்ந்த யார் விண்ணப்பித்தனர்?. ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறியுள்ளார். அவரிடம் நாங்கள் கூட்டணிக்கு வருகிறோம் என்று சொன்னது யார்?.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சேர உள்ளதாகவும், குமாரசாமிக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட உள்ளதாகவும் வெளியான தகவல் பொய் மூட்டை. இதன் மூலம் பா.ஜனதாவினர், ஜனதா தளம் (எஸ்) தொண்டர்கள் மற்றும் எங்கள் கட்சியை ஆதரிக்கும் மக்களின் எண்ணத்திற்கு விஷத்தை விதைக்கும் பணியை மேற்கொள்கிறார்கள். இது தார்மிகம் இல்லாத அரசியல் என்பதை பா.ஜனதா புரிந்துகொள்ள வேண்டும்.

1997-ம் ஆண்டு பிரதமர் பதவியை தேவேகவுடா தியாகம் செய்தார். அப்போது பா.ஜனதா மூத்த தலைவர் வாஜ்பாய், பிரதமர் பதவியில் நீடிக்க ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறினார். அப்போதே பிரதமர் பதவி மற்றும் மத்திய ஆட்சி அதிகாரத்தை நிராகரித்துவிட்டு வந்தோம். இப்போது வெறும் ஒரு மத்திய மந்திரி பதவிக்கு நான் ஆசைப்படுவேனா?.

அத்தகைய நபர் நானல்ல. தற்போதைக்கு எந்த கட்சிக்கும் யாருடைய தேவையும் இல்லை. எங்களுக்கு பா.ஜனதாவின் நட்பு தேவை இல்லை. எங்களுக்கு மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் கட்சி தொண்டர்கள் தான் தேவை. எங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்களின் முக்கிய நோக்கம் ஆகும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News