செய்திகள்
சித்தராமையா

பாஜக - மதசார்பற்ற ஜனதா தளம் இணைப்பு குறித்து சித்தராமையா பரபரப்பு பேட்டி

Published On 2020-12-22 01:50 GMT   |   Update On 2020-12-22 01:50 GMT
பாஜக - மதசார்பற்ற ஜனதா தளம் இணைப்பு குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சியை இணைப்பது குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டனர். அதற்கு உதாரணமாக கர்நாடக மேல்-சபை தலைவர் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஜனதா தளம் (எஸ்) ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதை கூறலாம். மேலும் மாநில அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடை சட்டத்தை அக்கட்சி எதிர்க்கவில்லை. புதிதாக கட்சி தொடங்கி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று பலத்தை காட்டட்டும் என்று எனக்கு குமாரசாமி சவால் விடுத்துள்ளார். நான் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளேன்.

இந்த சூழ்நிலையில் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. குமாரசாமியின் சவாலுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஆன்லைனில் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கல்வி போதிப்பது குறித்து நான் மாநில அரசுக்கு 3 கடிதம் எழுதினேன். அதற்கு அரசு ஒரு பதில் கடிதத்தையும் எனக்கு எழுதவில்லை. மாநில அரசு நான் எழுதும் கடிதங்களை மதிப்பதே இல்லை. அரசுக்கு நாகரிகம் இல்லை.

ஆன்லைனில் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே ஆசிரியர் தான் பாடம் நடத்துகிறார். ஆனால் முழு கட்டணத்தையும் செலுத்தும்படி பெற்றோரை தனியார் பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்துகின்றன. இதற்கு பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரும் உடந்தையாக செயல்படுகிறார். குடகு மாவட்டத்தில் வசிக்கும் கொடவா மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக நான் கூறவில்லை. நான் கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்து கூறிவிட்டன.

ஆயினும் அதற்காக வருத்தம் தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டேன். நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தி அந்த மக்கள் குடகில் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர். நான் கூறாத கருத்திற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க மாட்டேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News