தமிழ்நாடு
கழுத்தில் காயத்துடன் சுற்றி திரியும் புலியை காணலாம்

கழுத்தில் காயத்துடன் சுற்றி திரியும் புலி- விரைவில் பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறை தீவிரம்

Published On 2021-12-16 04:19 GMT   |   Update On 2021-12-16 04:19 GMT
பந்தலூர் அருகே கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சூர்:

தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் அருகே கேரளா வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ளது குருக்கன்மூலா கிராமம்.

இந்த கிராமத்தை யொட்டிய பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புலி ஒன்று சுற்றி திரிகிறது. இந்த புலி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளில் வளர்க்க கூடிய கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 15க்கும் அதிகமான கால்நடைகளை வேட்டையாடி உள்ளது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் இந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் வருவாய்த்துறையினருடன் இணைந்து புலியை பிடிக்க அந்த பகுதியில் கூண்டு வைத்து, அதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் புலி சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதுதவிர கண்காணிப்பு கேமராவும் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புலியை கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர் 2 கும்கிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். கும்கிகள் உதவியுடன் அந்த பகுதியில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் புலியின் உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த காட்சி பதிவான இடத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்கு வேட்டைக்கு வைக்கப்பட்ட சுருக்கில் புலி சிக்கியிருக்கலாம். இதனால் புலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக வீட்டில் வளர்க்க கூடிய கால்நடைகளை உணவுக்காக வேட்டையாடி வருகிறது. விரைவில் அந்த புலியை பிடித்து அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.



Tags:    

Similar News