செய்திகள்
கலெக்டர் சந்தீப்நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் உரம் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை- கலெக்டர் தகவல்

Published On 2019-11-12 15:00 GMT   |   Update On 2019-11-12 15:00 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் உரம் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

மேலும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். பின்னர் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மகளிர் திட்டம் மூலம் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ், 20 உழைக்கும் மகளிர் மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,660 மதிப்பிலான இலவச மூன்று சக்கர வாகனங்கள், 12 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கான உத்தரவு, கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனந்திருந்திய 22 நபர்களுக்கு மறுவாழ்வு நிதி உதவியாக ரூ.6,60,000-க்கான காசோலை, 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் என மொத்தம் 61 நபர்களுக்கு ரூ.17,98,525 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பின்பு கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பயன்படுத்தப்படும் மற்றும் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்தது.

அதே நேரத்தில் பயன் படுத்தப்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூடும் பணி கடந்த 2 வாரங்களாக மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. இதில் இதுவரை சுமார் 850 பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு உள்ளன.

பயன்படுத்தப்படாத ஆழ் துளைகிணறுகள் இருப்பதை அறிந்தால் பொதுமக்கள் உடனடியாக 1077 என்ற எண்ணிற்கும், கால் யுவர் கலெக்டர் மூலமும் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் கிடைத்த பின்னர் உடனடியாக பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படும். பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் முழுமையாக மூடப்பட்ட பின்னர் பொது இடத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு திட்டத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தை போல் பல்வேறு மாவட்டங்களில் உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து முன்னுரிமை பெற்று நமது மாவட்டத்தில் உரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாவட்டத்தில் உரம் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சலால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. மழை காலம் என்பதால் காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News