ஆன்மிகம்
புரட்டாசி கார்த்திகையையொட்டி தெய்வானையுடன் முருகப் பெருமான் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

திருப்பரங்குன்றம் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழா

Published On 2020-10-06 04:23 GMT   |   Update On 2020-10-06 04:23 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழா நடந்தது. சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினத்தன்று தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து நகர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் நகர்வீதிகளில் முருகப்பெருமான் உலா வருவது தவிர்க்கப்பட்டது. அதேபோல புரட்டாசி மாத கார்த்திகை தினமான நேற்று சுவாமி நகர் வீதிகளில் புறப்பாடு தவிர்க்கப்பட்டது. ஆனால் புரட்டாசி மாத கார்த்திகை விழாவானது உள் திருவிழாவாக நடைபெற்றது.

இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும் நடைபெற்றது. மேலும் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு தீபாராதனைகள் நடந்தது. இந்தநிலையில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தை வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதேசமயம் சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கருவறைக்கு நேரடியாக சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

மதுரை அருகே அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழாவும், அத்துடன் சங்கடஹர சதுர்த்தி விழாவும் நடந்தது. இதில் வித்தக விநாயகருக்கும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், ஆதிவேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. பக்தர்கள் வரிசையாக முக கவசம் அணிந்து சென்று நெய் விளக்குகள் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில் சதுர்த்தியும், கார்த்திகையும் இணைந்து வருவது தனிசிறப்பாகும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News