செய்திகள்
மரக்கன்று

கடந்த 3 மாதத்தில் சென்னையில் 25 ஆயிரத்து 783 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது

Published On 2021-08-12 03:21 GMT   |   Update On 2021-08-12 03:21 GMT
குடியிருப்பு நலச் சங்கங்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பசுமை பரப்பளவை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டாலும், அவற்றை பராமரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள், தெருக்கள் மற்றும் பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டு தொடர்ந்து பராமரிப்பது தொடர்பாக தன்னார்வ அமைப்பினர், குடியிருப்பு நலச்சங்கங்கள் மற்றும் பிற அமைப்பினர் ஆகியோரை இணைத்து பசுமை பேரியக்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் கடந்த மாதம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு குடியிருப்பு நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க தன்னார்வத்துடன் இசைவு தெரிவித்தனர். மரக்கன்றுகளை நடும்போது குறைந்தபட்சம் 7 அடி உயரமுள்ள மரக்கன்றுகளை நடவும், பாதுகாப்பு மர கூண்டுகள் அமைக்கவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர் ஊற்றி பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், குடியிருப்பு நலச் சங்கங்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் 7-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையிலான 3 மாதத்தில் 439 இடங்களில் மாநகராட்சி சார்பில் 13 ஆயிரத்து 424 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

மேலும் குடியிருப்பு நலச் சங்கங்களின் சார்பில் 1,394 மரக்கன்றுகள் மற்றும் பிற அமைப்பினர் சார்பில் 10 ஆயிரத்து 965 மரக்கன்றுகள் என மொத்தம் 25 ஆயிரத்து 783 மரக்கன்றுகள் நட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News