செய்திகள்
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்

காற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்

Published On 2019-10-21 09:13 GMT   |   Update On 2019-10-21 09:13 GMT
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

சென்னையில் நள்ளிரவு 12 மணிக்குமேல் கன மழை பெய்தது. புரசைவாக்கம், அயனாவரம், வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மீனம்பாக்கம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ரோடுகளில் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது.

இன்று காலையிலும் மழை தூறல்கள் விழுந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்துள்ளது.

இந்த நிலையில் தென் தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் சுழற்சி நிலவி வருகிறது.

அதுபோல தென் வங்க கடல் வடக்கு தமிழகத்தில் வளிமண்டலத்திலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியும் நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.



தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் வட தமிழகம் திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் மிக கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

டெல்டா மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூரில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும். 22-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் 2, 3 நாட்களுக்கு மழை தீவிரம் அடையும்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிக்கு இன்று (21-ந் தேதி), நாளை (22-ந் தேதி) மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:-

குளித்துறை 14 செ.மீ., பெரிய நாயக்கன் பாளையம் 12 செ.மீ., கோதையார் லோயர் அணை, மேட்டுப்பாளையம் 9 செ.மீ., குலேசேகரப்பட்டினம் 8 செ.மீ., வால்பாறை, மயிலாடி, அரவக்குறிச்சி, தூத்துக்குடி 7 செ.மீ., கனிமார், ஆலையார், பாம்பன், கடலாடி, தக்கலை, சென்னை, தென்காசி, கோதகிரி, போச்சம்பள்ளி, வேடசந்தூர், குளச்சல் 6 செ.மீ.,

ஊத்தக்கரை, சிதம்பரம், ராமேஸ்வரம், கோவை, இரணியல், போடி நாயக்கனூர், கேளம்பாக்கம், குன்னூர், ஊட்டி, செங்கோட்டை, போடி நாயக்கனூர்- 5 செ.மீ.,

தாம்பரம், குன்னூர், திருத்துறைப்பூண்டி, சீர்காழி, மகாபலிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், தொண்டடி தாராபுரம், பேச்சிப்பாறை, திருச்செந்தூர், ராசிபுரம், சங்கராபுரம், சோழிங்கநல்லூர்- 4 செ.மீ,

கொடைக்கானல், சாத்தனூர் டேம், தேவகோட்டை, மாயனூர், செம்பரப்பாக்கம், நாகர்கோவில், தேவாலா, பூந்தமல்லி, தரங்கம்பாடி, திருவாடானை- 3 செ.மீ.

இது தவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1 செ.மீ. முதல் 2 செ.மீ. வரை மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News