செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா

Published On 2021-05-07 08:33 GMT   |   Update On 2021-05-07 08:33 GMT
கடந்த 10 நாட்களில் மட்டும் 36,110 பேர் கொரோனாவால் இறந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. இது உலகில் எந்த நாட்டிலும் இதுவரை இல்லாத அளவில் 10 நாள் பலி எண்ணிக்கையில் அதிகமாகும்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையிலும், பரவல் வேகம் குறையவில்லை.

பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத்துறை அறிக்கையின்படி நேற்று 4,14,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ‘www.covid19india.org’ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்தை தாண்டிஉள்ளது. நேற்று முன்தினம் 4,12,262 பேர் பாதிக்கப்பட்டதே இதுவரை ஒரு நாள் பாதிப்பில் அதிகமாக இருந்தது. நேற்று பாதிப்பு அதைவிட அதிகமாகி புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 49,058, கேரளாவில் 42,464, உத்தரபிரதேசத்தில் 26,622, தமிழ்நாட்டில் 24,898, ஆந்திராவில் 21,954, டெல்லியில் 19,133 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

மொத்த பாதிப்பில் மகாராஷ்டிராவில் 49,42,736, கேரளாவில் 17,90,104, கர்நாடகாவில் 17,86,397, உத்தரபிரதேசத்தில் 14,25,916, தமிழ்நாட்டில் 12,97,500, ஆந்திராவில் 12,28,186 பேர் அடங்குவர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.


கொரோனா பாதிப்பால் தொடர்ந்து 10-வது நாளாக நேற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 853, உத்தரபிரதேசத்தில் 350, கர்நாடகாவில் 328, டெல்லியில் 335, தமிழ்நாட்டில் 195, சத்தீஸ்கரில் 212, ராஜஸ்தானில் 161, அரியானாவில் 177, பஞ்சாபில் 154, மேற்கு வங்கத்தில் 117, குஜராத்தில் 123, ஜார்க்கண்டில் 133, உத்தரகாண்டில் 151 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 3,920 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2,34,071 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 73,515, கர்நாடகாவில் 17,212, உத்தரபிரதேசத்தில் 14,501, தமிழ்நாட்டில் 14,974, டெல்லியில் 18,398, மேற்குவங்கத்தில் 11,964 பேர் அடங்குவர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்புகள் 10 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

கடந்த 10 நாட்களில் மட்டும் 36,110 பேர் இறந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரிய வந்துள்ளது. இது உலகில் எந்த நாட்டிலும் இதுவரை இல்லாத அளவில் 10 நாள் பலி எண்ணிக்கையில் அதிகமாகும்.

அதிகபட்சமாக 10 நாள் பலி எண்ணிக்கை அமெரிக்காவில் 34,798, பிரேசிலில் 32,692, மெக்சிகோவில் 13,897, இங்கிலாந்தில் 13,266 ஆக உள்ளது.

நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்தை நெருங்கி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி 36 லட்சத்து 44 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News