செய்திகள்
சுரண்டையில் சூறாவளி காற்றுடன் பெய்தமழையில் தனியார்பீடி கம்பெனியின் மேற்கூரை சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்

நெல்லையில் வாட்டி வதைக்கும் வெயில்- தென்காசி மாவட்டத்தில் திடீர் மழை

Published On 2021-04-06 07:00 GMT   |   Update On 2021-04-06 07:00 GMT
நெல்லை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் சாலைகளில் குடைகளை பிடித்த படி நடந்து செல்கின்றனர்.
தென்காசி:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.

நெல்லை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் சாலைகளில் குடைகளை பிடித்த படி நடந்து செல்கின்றனர்.

கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை 100 டிகிரியை எட்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையோரத்தில் உள்ள கூழ், இளநீர் கடைகளை நாடி செல்கின்றனர்.

தென்காசி மாவட்டத்திலும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, ஆய்க்குடி உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

சுரண்டை பகுதியில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை சுமார் 1 மணி நேரம் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக பகுதியில் தனியார் பீடி கம்பெனி ஒன்றின் மேற்கூரை சேதமடைந்தது.

இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடிகள் மழையில் நனைந்து நாசமாகியது.

பாவூர்சத்திரம் பகுதியிலும் பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News